Search This Blog

Friday, October 30, 2009

மனோன்மணீயம்

மனோன்மணீயம் நாடகத்தை எழுதியவர் பேராசிரியர். பெ. சுந்தரம்பிள்ளை. இவர் இன்றைய கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழை என்னும் ஊரில் 1855 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் பெருமாள் பிள்ளை, தாயார் மாடத்தி அம்மாள். சைவ நெறி போற்றும் குடும்பத்தில் பிறந்த சுந்தரம்பிள்ளை இளமையிலேயே தேவார திருவாசகங்களில் தேர்ச்சி பெற்றவராய் விளங்கினார். இவரது ஞானாசிரியர் கோடக நல்லூர் சுந்தரசுவாமிகள் ஆவார்.

வாழ்க்கையும் பணிகளும் 1877 ஆம் ஆண்டு ஆசிரியப் பணியைத் தொடங்கிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை முதலில் திருநெல்வேலியில் ஆங்கிலத் தமி¢ழ்க் கல்விச் சாலையில் பணிபுரிந்தார்; பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையில் (Philosophy) ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.அதன் பின்னர்த் திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் (Revenue Dept) தனி அலுவலராகப் பொறுப்பேற்றார். 1885 ஆம் ஆண்டு மீண்டும் தத்துவத்துறையி¢லேயே பேராசிரியராகப் பணியில் அமர்த்தப் பெற்றார். இறுதி வரையில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தத்துவத் துறையின் தலைமைப் பேராசிரியராகவே இருந்தார்.தமது நாற்பத்திரண்டாவது வயதில் 26.04.1897 இல் இவர் அமரர் ஆனார்.

படைப்புகள்

இவரது முதல் படைப்பு நூற்றொகை விளக்கம் என்னும் நூலாகும். இந்நூல் 1888 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவரது இரண்டாம் படைப்பு மனோன்மணீயமாகும். இக்கவிதை நாடகநூல் 1891 ஆம் ஆண்டு வெளிவந்தது. அடுத்து விதாங்கூரின் பண்டை மன்னர்கள் என்னும் ஆராய்ச்சி நூலை 1894 ஆம் ஆண்டு வெளியிட்டார். திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி எனும் நூலை 1895 ஆம் ஆண்டு வெளியிட்டார். நூல்கள் மட்டுமன்றி ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இதழ்களில் எழுதிவந்தார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது பத்துப்பாட்டுத் திறனாய்வாகும். இது சென்னைக் கிறித்தவக் கல்லூரி இதழில் வெளிவந்தது.


பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தத்துவத் துறைப் பேராசிரியராக இருந்ததால் பொதுவாக இவரது அனைத்துப் படைப்புகளிலும் தத்துவத்தின் சாயல் கூடுதலாக இருப்பதைக் காணலாம். தமிழ் ஆய்விலும், படைப்பிலக்கியத்திலும் கூடுதலான பணியைச் செய்த பேராசிரியர், இளமையிலேயே மறைந்தது தமிழ் ஆய்வுலகுக்கும் தமிழ் கூறு நல்லுலகுக்கும் பேரிழப்பாகும். குறிப்பாக, தமிழ் நாடக உலகம் ஒரு மிகச் சிறந்த நாடகப் பேராசிரியரை இழந்து விட்டது என்றே கூறலாம்.



மனோன்மணீயம்

மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில் Act என்று குறிப்பிடலாம். களம் என்பதை scene என்று குறிப்பிடலாம். மனோன்மணீயத்தின் முதல் அங்கம், ஐந்து களங்களைக் கொண்டு விளங்குகிறது. இரண்டாம் அங்கம், மூன்று களங்களைக் கொண்டுள்ளது. மூன்றாம் அங்கம், நான்கு களங்களைக் கொண்டுள்ளது. நான்காம் அங்கம், ஐந்து களங்களையும் ஐந்தாம் அங்கம் மூன்று களங்களையும் கொண்டு உள்ளது. ஐந்து அங்கங்களும் இருபது களங்களுமாக மனோன்மணீயம் நாடகம் முழுமை பெற்று இருக்கிறது.

இன்பியல் பொதுவாக நாடகம் முடியும் நிலையில் இன்பியல் நாடகம் என்றும் துன்பியல் நாடகம் என்றும் இரு நிலைகளில் முடிவடையும்.மனோன்மணீய நாடகம் இன்பியல் நாடகமாக முடிவுபெற்றுள்ளது.

கவிதை மனோன்மணீயம் கவிதை நாடகமாக இருப்பதால் தமிழின் பல பாவகைகள் இதில் இடம் பெற்றுள்ளன. பெரும்பான்மையாக ஆசிரியப்பாவே நாடகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. மற்றும் ஆசிரியத் தாழிசை, வெண்பா, கலித்துறை, வெண் செந்துறை, கொச்சகக்கலிப்பா, மருட்பா எனப் பிற பாவகைகளும் இடம் பெற்றுள்ளன. தமிழ்த் தெய்வ வணக்கத்தைச் சேர்த்து மொத்தம் 4502 அடிகளில் இந்நாடகம் அமைந்து உள்ளது.

கதைச் சுருக்கம்

பாண்டிய மன்னன் சீவகன் மதுரை மாநகரைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை சீவகன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் அருங்குணங்களின் நாயகன்; கள்ளம் கபடம் சிறிதும் அறியாதவன். அவனுக்குத் தலைமை அமைச்சனாகக் குடிலன் என்பவன் இருந்தான். அவன் ஆட்சிக்கு வேண்டிய சூழ்ச்சித் திறமை அனைத்தையும் உடையவன்; அதே சமயம் தீய குணம் படைத்தவன்.

தலைநகர் மாற்றம் மன்னனுக்கு உண்மையானவன் போல் நடித்து எளிதில் மன்னனைத் தன் வயப்படுத்திக் கொண்டான். தன் வாய்ப்பையும் வசதியையும் செல்வாக்கையும் வளர்த்துக் கொள்ளத் திட்டம் தீட்டினான். தன் திட்டம் வெற்றி அடைவதற்கு முதல் தடையாக இருப்பது மன்னனின் தலைநகராகிய மாமதுரை என்பதை உணர்ந்தான். எனவே தன் இயல்புகளுக்கு ஏற்ற இடத்தில்- தான் செல்வாக்குச் செலுத்த முடியும் என்ற இடத்தில் தலைநகரை மாற்றத் திட்டம் தீட்டினான். அவ்வாறே அரசனின் ஒப்புதலுடன் திருநெல்வேலிக்குத் தலைநகரை மாற்றினான். அங்கே கோட்டை கொத்தளங்களை உருவாக்கினான்.
பாண்டிய மன்னனின் குலகுரு
 
சுந்தர முனிவர் மன்னன் சீவகனின் குலகுருவாக விளங்கியவர் சுந்தர முனிவர். தலைநகர் மாற்றத்தால் மன்னனுக்குத் தீங்கு விளையுமோ என்று சுந்தர முனிவர் அஞ்சினார். எனவே பாண்டியனுக்கு வர இருக்கும் தீங்கைத் தடுக்க எண்ணித் தானும் திருநெல்வேலியில் குடியேறினார். தன் குலகுரு நெல்லைப் பகுதிக்கு வந்திருப்பதை மன்னன் அறிந்தான். தன் அரண்மனைக்கு அவரை வரச் செய்தான். புதிய தலைநகரின் கோட்டைகள், அரண்மனை ஆகியவற்றைச் சுற்றிக் காட்டினான். அவற்றின் நிலையாமையைச் சுந்தர முனிவர் மன்னனுக்கு உணர்த்தினார். மன்னனி¢ன் குடும்பத்திற்கும், அரண்மனை முதலிய மற்ற இடங்களுக்கும் நலமும் வளமும் கூடுவதற்குச் சில சிறப்புப் பூசைகள் நடத்த வேண்டும் என்று கூறினார். அதற்காக அரண்மனையிலேயே ஒரு பகுதியில் தமக்குத் தனி அறை வேண்டும் என்று கூறிப் பெற்றுக் கொண்டார்.

மனோன்மணியும் வாணியும்

மனோன்மணி பாண்டிய மன்னன் சீவகனின் ஒரே மகள் மனோன்மணி. அழகிய தோற்றத்தை உடையவள். அருள் உள்ளத்தினள். பதினாறு வயது நிரம்பிய பருவ மங்கை. அவளுக்கு உயிர்த் தோழியாய் வாணி விளங்கினாள். இவள் கள்ளம் கபடம் அற்றவள். மனதில் பட்டதை மறைக்காமல் பேசிப் பழகியவள்.
வாணியின் திருமணப் பேச்சு வாணியின் காதலன் நடராசன். சிறந்த குணங்களை உடையவன். வாணியின் தந்தையின் பெயர் சகடன். இவன் பொருள் ஆசைமி¢க்கவன். தன் மகளைக் குடிலனின் மகன் பலதேவனுக்கு மணம் முடித்துக் கொடுத்து அதன் மூலம் தனக்குச் செல்வத்தையும் சமூக மதிப்பையும் தேடிக் கொள்ள விரும்பினான்.

கனவில் வந்த காதலன் புருடோத்தமன் சேரநாட்டு அரசன் புருடோத்தமன் சிறந்த வீரன். இவனது திருவுருவத்தை மனோன்மணி கனவிலேயே கண்டு காதலுற்றாள். காதல் நோயால் வாடினாள். அவள் உடல் நோய்க்குக் காரணம் தெரியாமல் மன்னன் சீவகன் வருந்தினான். அப்போது சுந்தரமுனிவர் அங்கே வந்தார். மனோன்மணிக்கு ஏற்பட்டது காதல் நோய் என்றும், திருமணமே அதற்கு உரிய சரியான மருந்து என்றும் சுந்தரர் தம் குறிப்பால் உணர்ந்தார். மனோன்மணிக்குப் பொருத்தமானவன் சேரமன்னன் புருடோத்தமனே என்பதைச் சீவகனிடம் தெரிவித்தார். இச்செயலை எளிதில் நிறைவேற்றக் கூடியவன் வாணியின் காதலன் நடராசனே என்றும் கூறினார். ஏற்கனவே நடராசனைப் பற்றி வாணியின் தந்தை சகடன் கூறிய சொற்களால் சீவகன் நடராசன் மீது சினமுற்று இருந்தான். எனவே, சுந்தர முனிவரின் நன்மொழியைச் சீவகன் ஏற்கவில்லை. மேலும் குடிலன் சீவகனின் மனத்தைத் தன் தந்திர வலையில் கட்டிப் போட்டு இருந்தான். எனவே மன்னன் அவனது கைப்பாவை ஆகிவிட்டான்.

குடிலன் சூழ்ச்சி புருடோத்தமன் சீவகனின் மருமகனாகி விட்டால் தன் சொல்வாக்குச் சீவனிடம் குறைந்துவிடும் என்று எண்ணிய குடிலன், அதைத் தடுக்கத் திட்டம் தீட்டினான். மேலும் தன் மகன் பலதேவனுக்கே மனோன்மணியை மணம் முடித்தால் பாண்டிய நாடே தன் கட்டுப் பாட்டில் வந்துவிடும் என்றும் கனவு கண்டான். ‘பெண் வீட்டார் பிள்ளை வீட்டாரிடம் மணம் பேசிச் செல்லுதல் வழக்கம் அல்ல இருப்பினும், புருடோத்தமனின் மனநிலையை முதலில் அறிந்து கொள்வோம்' எனக் கூறினான். அதற்கு முதற்படியாக, ஏதேனும் ஒரு காரணம் கொண்டு தன் மகன் பலதேவனைத் தூது அனுப்பலாம் என்றும் மன்னனிடம் கூறினான். மன்னனும் அதற்கு உடன்பட்டுப் பலதேவனைத் தூதுவனாக அனுப்பினான்.

கனவில் வந்த காதலி சேர நாட்டு மன்னன் புருடோத்தமனும் மனோன்மணியைப் போலவே கனவு கண்டான்; கனவில் வந்த மனோன்மணியிடம் காதல் கொண்டான். நாளுக்கு நாள் கனவு வளர வளர அவன் உள்ளம் மிகவும் வாடியது. இந்த வேளையில்தான் பலதேவன் தூதுவனாகப் புருடோத்தமன் அவைக்குச் சென்றான். தன் தந்தையாகிய குடிலன் சொல்லிக் கொடுத்ததற்கு ஏற்ப புருடோத்தமனிடம் வேண்டும் என்றே தகாத எதிர்வாதம் செய்து பாண்டிய மன்னன் மீது போர் தொடுக்கும் அளவிற்கு வாதத்தைப் பெரிது படுத்திவிட்டான். இதனால் போர் ஏற்பட்டது.

போர் சேரநாட்டுப் படைகளும் பாண்டிய நாட்டுப் படைகளும் திருநெல்வேலிக்கு எதிரில் ஒன்றுடன் ஒன்று போரிட்டன. போரில் பாண்டிய நாட்டுப் படையில் குழப்பம் ஏற்பட்டது. அதனால் அப்படை ஏறக்குறையத் தோல்வி நிலையை அடைந்தது. பாண்டிய மன்னன் சீவகன் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டது. ஆனால் நாராயணன் என்னும் போர் வீரனால் சீவகன் காப்பாற்றப்பட்டான். நாராயணன் நடராசனின் நண்பன். குடிலனின் சூதுகளை நன்கு அறிந்தவன்.

கழுவேற்றம் அரண்மனை வந்து சேர்ந்த சீவகன் தோல்விக்கான காரணத்தை ஆராயத் தொடங்கினான். சூழ்ச்சித் திறமும் சூது எண்ணங்களும் நிரம்பப் பெற்ற குடிலன், நாராயணனால்தான் இப்பெரிய தோல்வி ஏற்பட்டது என மன்னன் நம்புமாறு கூறினான்.அதனால் நாராயணனைக் கழுவேற்றிக் கொல்லும் படி சீவகன் கட்டளையிட்டான், இந்த வேளையில் சீவகனுக்கு ஒரு கேடு வர இருப்பதை உணர்த்தி அதற்காக முக்கிய ஆலோசனை நடத்த வேண்டும் என்று சுந்தர முனிவர் செய்தி அனுப்பி இருந்தார். எனவே நாராயணனைக் கழுவேற்றுவதைத் தற்காலிகமாகச் சீவகன் நிறுத்தி வைத்தான்.

இரகசியப் பாதை, அதிசய மனிதர் சுந்தரமுனிவர் அரண்மனையில் தனக்காக ஒதுக்கப்பட்ட அறையிலிருந்து தனது ஆசிரமம் வரையில் பூமிக்கும் கீழே இரகசிய வழி ஒன்றை ஏற்படுத்தி இருந்தார். இப்போது அவ்வழியே சீவகன், மனோன்மணியை அழைத்துக் கொண்டு தன் ஆசிரமத்தில் வந்து பார்க்குமாறு வேண்டி இருந்தார். ஆனால் அரண்மனை, கோட்டை ஆகியவற்றில் சீவகன் அளவற்ற அன்பு கொண்டிருந்ததால் தான் வர மறுத்துவிட்டுத் தன் மகள் மனோன்மணியை மட்டும் நடுஇரவு வேளையில் அனுப்புவதற்கு ஒத்துக் கொண்டான். மனோன்மணியை அனுப்பி வைக்கும் நடுஇரவு நேரம் வந்தபோது மன்னனுக்கு மகள் மேல் அளவில்லாத பாசம் ஏற்பட்டது. எனவே மன்னன் குழம்பிவிட்டான். குடிலனை அழைத்தான். சுந்தரர் தன்னிடம் சொன்ன செய்திகளைக் குடிலனிடம் சொல்லி அவன் என்ன கருதுகிறான் என்பதைத் தான் அறிந்து கொள்ள முயன்றான். சுந்தரர் ஏற்படு¢திய இரகசிய வழியைப் பற்றியும் குடிலனிடம் கூறிவிட்டான்.

கெடுமதிக் குடிலன் கெடுமதி படைத்த குடிலன் சீவகனுக்கு எதிராகவும் தனக்குச் சாதகமாகவும் உடனே திட்டம் தீட்டி விட்டான். நடு இரவு வேளையில் மனோன்மணியைச் சுந்தரரிடம் அனுப்பலாம் என்றும் ஆனால் அவள் கன்னியாய்ச் செல்வது தகாது என்றும் கூறினான். சுந்தரரிடம் அனுப்புவதற்கு முன் தன் மகன் பலதேவனுக்கு மனோன்மணியைத் திருமணம் முடித்து அனுப்பலாம் என்றும் கூறினான். சீவகனும் அதற்கு ஒத்துக் கொண்டான். பின்னர், குடிலன் இரகசிய வழியைக் கண்டறிய உடனே புறப்பட்டான். பூமிக்குக் கீழே சென்ற அந்த இரகசியவழி சேரநாட்டுப் படைகள் தங்கி இருந்த பாசறைக்கு அருகில் கொண்டு போய் விட்டது. அந்த வழியைச் சேர மன்னன் புருடோத்தமனிடம் காட்டிக் கொடுத்து விட்டால் போரே நடைபெறாமல் எளிதில் அவன் அரண்மனையைக் கைப்பற்றி விடுவான் என்று நினைத்தான். ஒரு குடம் தாமிரபரணி ஆற்று நீரும்; பாண்டியனுக்கு உரிய வேப்ப மாலையும் தன் தோல்விக்கு அடையாளமாகக் கொடுத்து விட்டால் தான் போரை நிறுத்தி விடுவதாகத் தன் தூதுவன் மூலம் புருடோத்தமன் முதல் நாள் போரில் சொல்லிவிட்டது இப்போது குடிலனின் நினைவுக்கு வந்தது. இதையே காரணம் காட்டி இப்போது சீவகனைப் பிடித்துக் கொடுத்துவிட்டுத் தான் நாட்டைக் கைப்பற்றி விடலாம் என்று குடிலன் எண்ணினான்.


குடிலன் கைது இந்த நினைவுகளுடன் அவன் பாசறையை நோக்கி நடந்தான். பாசறையில் இருந்த புருடோத்தமன் தூக்கம் இல்லாமல் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான். கனவில் வந்த மனோன்மணியின் உருவம் மீண்டும் அவன் கனவிலும் நினைவிலும் நிழலாடியது. அப்போது குடிலன் அவனைச் சந்தித்தான். தன் தீய எண்ணத்தை நல்லவன் போல் நடித்து வெளிப்படுத்தினான். ஆனால் தன்னலங் கருதாத புருடோத்தமன், தீய எண்ணம் உடைய குடிலனைக் கைது செய்யுமாறு கூறினான். கைது செய்த நிலையிலேயே அவனை அழைத்துக் கொண்டு இரகசிய வழி வழியாகத் தன் வீரர்களுடன் அரண்மனையை நோக்கி வந்துகொண்டு இருந்தான்.
கண்டான்; வென்றான் இந்த வேளையில், சீவகன் மனோன்மணியைப் பலதேவனுக்கு மணம் முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தான். சேரநாட்டு மன்னனால் பாண்டிய நாட்டுக்கு வர இருக்கும் பேராபத்தை மனோன்மணிக்கு உணர்த்தினான். தன் தந்தையின் நிலைமையை எண்ணி இரக்கம் கொண்டு மனோன்மணியும் பலதேவனை மணக்க ஒத்துக் கொண்டாள். சுந்தர முனிவரும் வரவழைக்கப்பட்டார். மனோன்மணியின் வேண்டுகோளுக்கு இணங்க நாராயணனும் விடுவிக்கப் பெற்று நடராசனும் நாராயணனும் அங்கே வந்து சேர்ந்தனர். பலதேவன் மனோன்மணிக்கு மாலை சூடத் தயார் ஆனான். அப்போது இரகசிய வழியாகக் குடிலனை இழுத்து வந்த புருடோத்தமன், திடீரென வெளிப்பட்டான்.
மனோன்மணி, தான் கனவில் கண்டு மகிழ்ந்த புருடோத்தமன் உருவத்தை நேரில் கண்டதும் மகிழ்ச்சியில் மயக்க நிலைக்கு ஆளானாள். மன்னன் கழுத்தில் மாலையைச் சூட்டி அவன் மார்பிலேயே மயங்கி விழுந்தாள். மன்னன் கனவில் வந்தவளும் மனோன்மணியே ஆதலால் அவனும் மகிழ்ச்சியுடன் அவளைத் தாங்கிப் பிடித்தான். குடிலனின் தீய குணமும், சூழ்ச்சியும் அங்கே வெளிப்பட்டன. சீவகன் மனோன்மணியையும் புருடோத்தமனையும் வாழ்த்தினான்.தன் குரு சுந்தர முனிவரால் தெளிவு பெற்றான்.